அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு!

அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு!

அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. வங்கி உதவி மேலாளர் ஒருவர் இறந்துவிட்டார். தாசில்தார், புலிகள் காப்பக துணை இயக்குனர், அரசு ஆஸ்பத்திரி 3 செவிலியர்கள், மருந்தாளுனர், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர், பல் டாக்டர், ஜவுளிக்கடை அதிபர் உள்பட 30-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அம்பை தாலுகா அலுவலகமும், புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகமும் மூடப்பட்டு உள்ளது. இதையொட்டி அம்பை ஆர்ச் முதல் பூக்கடை பஜார் வரை கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி ஏற்கனவே கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக அம்பை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளின் வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். சனிக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 18-ந்தேதி (சனிக்கிழமை) வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் இரவு 8 மணி வரை இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே அம்பையில் உள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை.

சுரண்டையிலும் முழு கடையடைப்பு

சுரண்டையில் நாளை (சனிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை 3 நாட்களும் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 14-ந் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் (பார்சல் மட்டுமே வழங்கப்படும்) என சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் வணிக வளாகம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here