சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து!

1223

கொரோனா தொற்று காரணமாக நிகழாண்டு நடைபெற உள்ள காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மூலக் கோயிலாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் குலதெய்வ வழிபாடான பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களும் சொரிமுத்து அய்யனாரை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருவர். ஆடி அமாவாசைக்கு திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர்.

இந்நிலையில் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பிற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அனைத்துக் கோயில்களும் மூடபட்ட நிலையில், பங்குனி உத்தரம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. தற்போது பொதுமுடக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஜூலை 20இல் நடைபெற வேண்டிய ஆடி அமாவாசை திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு 11 நாள்களுக்கு முன் கால்நாட்டப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் தங்கியிருந்து விரதமிருந்து வரும் நிலையில் ஜூலை 10 வெள்ளிக்கிழமை கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெறவில்லை. மேலும் ஆடி அமாவாசை நிகழ்ச்சியின் 9ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக சிங்கம்பட்டி ஜமீனின் ராஜ அலங்கார தரிசனம் நடைபெறுவதுண்டு. இந்நிலையில் சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். தீர்த்தபதி மே 25இல் காலமானதையடுத்து வரும் ஆண்டுகளில் ராஜ அலங்கார தரிசன நிகழ்ச்சி நடைபெறுமா என்று பக்தர்கள் ஐயத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here