தென்காசியில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான செங்கோட்டை, கடையம், சுரண்டை, பாவூர்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை ஏற்றி செல்ல பத்து 108ஆம்புலன்ஸ் பயன்பட்டு வருகிறது. இதில் 2 ஆம்புலன்ஸ் கொரோனா நோயாளிகளுக்காக இயங்கி வருகிறது.
இந்நிலையில் இன்றிரவு ஒன்றரை மணியளவில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அதிகாலை கொரோனா சிகிச்சை மையம் அருகே வந்தது. இதில் நோயாளியை ஏற்றி வாகனம் புறப்பட்ட நிலையில் வண்டியில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீ பிடித்தது. வாகன ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு நோயாளியை வாகனத்தில் இருந்து வெளியேற்றிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
அதேசமயம் தீ மளமளவென்று பிடித்ததில் கொரோனா நோயாளியின் உடைகள் வைத்திருந்த பைகள், வாகனத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீ-க்கு இரையாகியது. மேலும் தீ பரவாமல் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த தீ விபத்து நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.