பரிசோதனையே செய்யாத நிலையில் இறந்தவருக்கு கரோனா இல்லை பெண்ணுக்கு தொற்று என முடிவு: தென்காசி கரோனா கட்டுப்பாட்டு மைய தகவலால் அதிர்ச்சி

921
Covid19
Covid19

தென்காசியில் கரோனா பரிசோதனை செய்யாதவருக்கு பாசிட்டிவ் என்றும், இறந்து 7 மாதம் ஆனவருக்கு நெகட்டிவ் என்றும் முடிவு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரதுசெல்போன் எண்ணுக்கு கரோனா கட்டுப்பாட்டுமையத்தில் இருந்து தொலைபேசி குறுந்தகவல் வந்துள்ளது. அதில், இவரது தந்தை அந்தோணிராஜுக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றும், மனைவி ஜென்ஸிக்கு பாசிட்டிவ் என்றும் ரிசல்ட் வந்திருப்பதாக இருந்தது. தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு கரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், தென்காசி கரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வினோத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அதில், ஜென்ஸிக்கு கரோனா பாசிட்டிவ்வந்துள்ளதால் மருத்துவமனையில் சேருமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்தஅவர், நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம். சொந்த ஊருக்குவந்து, சென்னைக்கு திரும்பி ஒரு மாதம் ஆகிறது. எனது தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிவிட்டன.

ஆட்சியரிடம் புகார்

எனது தந்தைக்கோ, மனைவிக்கோ கரோனா பரிசோதனை எங்கும் செய்யவில்லை.எப்படி பாசிட்டிவ் வரும் என்று திருப்பி கேட்டுள்ளார். இதனால், அந்த ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து வினோத் கூறும்போது, “எனது தந்தை உடல்நலக்குறைவால் இறந்து 7 மாதங்கள் ஆகின்றன. கடந்த 6 மாதமாக நாங்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்துவருகிறோம். தேர்தலுக்கு வாக்களிக்க சுரண்டைக்கு வந்துவிட்டு நான் சென்னைக்கு திரும்பிவிட்டேன். எனது மனைவியும் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்று வாக்களித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

எனது மனைவி எங்கும் கரோனா பரிசோதனை செய்யவில்லை. இந்த நிலையில், எனது மனைவிக்கு கரோனா இருப்பதாகவும், இறந்துவிட்ட எனது தந்தைக்கு கரோனா இல்லை என்றும் ரிசல்ட் வந்துள்ளது.

தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஊழியர் எனது மனைவியை மருத்துவமனையில் சேருமாறு கூறினார். நடந்த விவரத்தை கூறியதும் பதில் எதுவும் கூறாமல் தொலைபேசி இணைப்பை வைத்துவிட்டார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளேன்” என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “யாராவது தவறான தொலைபேசி எண்ணை கொடுத்து பரிசோதனை செய்திருக்கலாம். இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

தவறான தொலைபேசி எண்ணைக் கொடுத்து பரிசோதனை செய்திருந்தால் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். அந்த நபர் சிகிச்சை மேற்கொள்ளாமல் வெளியில் இருப்பதால் அவர் மூலமாக மேலும் பலருக்கு கரோனா பரவும் சூழ்நிலை உருவாகும். இந்த விவகாரம் தென்காசியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ் திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here