குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி, தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை அமலில் இருக்குமென தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை நீட்டிப்பு தென்காசி மாவட்ட மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குற்றால சீசனை நம்பியிருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கடையம் ராமநதி அணை திடீர் மூடல்!