இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியருக்கு பரிசு
நெல்லையில் இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டி பரிசு வழங்கினார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). லேப்டாப் இஞ்ஜினியரான இவர் கடந்த 18 ம் தேதி இரவு 11 மணிக்கு வேலையை முடித்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வீடு திரும்ப முடியாமல் வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் தவித்துக்கொண்டிருந்த வயதான மூதாட்டியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு நெல்லை டவுனில் உள்ள மூதாட்டி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது டவுன் பொருட்காட்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்ற மணிகண்டனுக்கு அபராதம் விதித்தனர். மணிகண்டன் நடந்த விவரங்களை தெரிவித்தார். ஆனாலும் போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததால் மன உளைச்சலான மணிகண்டன் இதனை சமூக வலைதளத்தில் மன வேதனையுடன் பதிவு செய்தார்.
இதையறிந்த துணை கமிஷனர் சரவணன், மனித நேயத்துடன் நடந்து கொண்ட இன்ஜினியர் மணிகண்டனுக்கு ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது அபராதம் கட்டணத்தை ரத்து செய்து, அவரது மனித நேயத்தை பாராட்டி பரிசு வழங்கினார்.