புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?

2653

காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா?

ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை. இந்த அனைத்து நிலைகளும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நடைபெறுகிறது.


கடற்பரப்பில் 26’C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது.

இதன் காரணமாகத் தாழ்வு நிலை உண்டாகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது. இந்நிலையிலேயே புயலின் கண் உருவாகும். காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது 31 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும்.


புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 – 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.

அப்படிச் சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அதன் அடர்த்தி, பரப்பளவைப் பொறுத்துதான் புயலின் வலிமையை வரையறை செய்ய இயலும். இப்படிச் சுழலும் மேகக் கூட்டங்களைக்கொண்ட காற்று, கடற்பகுதியிலிருந்து கரையை நெருங்கும்போது, கனமழையுடன்கூடிய புயற்காற்று தாக்குகிறது. இந்தப் புயல் நிலப்பரப்பில் நீண்டதூரம் பயணித்ததும் வலுவிழந்து காற்றின் வேகம் குறைகிறது. இந்தப் புயல் மீண்டும் கடலை அடையும்போது வலுவடையவும் வாய்ப்பிருக்கிறது.


காற்றானது மணிக்கு 31 கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

காற்றானது மணிக்கு 32 – 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

காற்றானது மணிக்கு 52 – 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

காற்றானது மணிக்கு 63 – 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.

காற்றானது மணிக்கு 88 – 117 கி.மீ வேகத்தில் வீசினால் அது தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 118 – 165 கி.மீ வேகத்தில் வீசினால் அது மிகத் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 165 – 221 கி.மீ வேகத்தில் வீசினால் அது கடும் தீவிர புயல்

காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அது அதி தீவிர புயல்.

நன்றி: விகடன்

இதையும் படிக்க: அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here