நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைவில் முடிக்கக்கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி முதல் தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை அமைக்க ரூ.412 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2018 ஜூலை மாதம் தொடங்கி 2020 செப்டம்பரில் முடிவடைய வேண்டும். ஆனால் தற்போது வரை நான்கு வழிச்சாலை பணி முடிவடையவில்லை.
நான்கு வழிச்சாலைக்காக ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1400 மரங்களை அகற்றி உள்ளனர். இருப்பினும் நான்கு வழிச்சாலை பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
திருநெல்வேலி- தென்காசி சாலையில் ஏராளமான அபாயகரமான வளைவுகள் உள்ளன. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் குறுக்கிடுகின்றன. தற்போதுள்ள இரு வழிச்சாலையில் அதிகளவில் பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே, திருநெல்வேலி முதல் தென்காசி வரை நான்கு வழிச்சாலைச் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். மனு தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.