‘வடிவேலு கொண்டையை மறந்ததை போல டீ-சார்ட்டை மறைக்க மறந்த கொள்ளையன்; சொந்த ஊரிலேயே ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம்..
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. இவ்வங்கியின் ஏ.டி.எம்.மில் நேற்றிரவு காவலாளி யாருமில்லை.
இந்நிலையில் இன்றிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் திரும்பி சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த குற்றாலம் காவல்துறையினர் ஏ.டி.எம். அறையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சுத்தியல், கல் கடப்பாறை கம்பி என ஒரு ஒரு பொருளாக வெளியிலிருந்து எடுத்துவந்து உடைக்க முயன்றதும், கொள்ளையன் அணிந்திருந்த டீ-சார்டின் பின்புறம் அவருடைய பெயர் சுருக்கமாக பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதையும் கண்டனர். இதைவைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் உள்ளூரைச் சேர்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த போலீசார், அதனடிப்படையில் தேடிவந்தனர்.
இதையடுத்து தேடிய நான்கு மணி நேரத்தில், திருட்டில் ஈடுபட்டது இலஞ்சி வேளாளர் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து (19) என்பது தெரியவந்தது..பின்னர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் முத்துவை கைது செய்தனர்.
நன்றி: புதிய தலைமுறை
இதையும் படிக்க: தென்காசியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை!