கடனாநதி அணை அடிவாரத்தில் பயிர்களை காட்டுப்பன்றி அழித்து நாசம்; விவசாயிகள் கவலை!

கடனாநதி அணை அடிவாரத்தில் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்டப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி அரசபத்து கால்வாய் பாசனத்தில் சுமார் 1,500 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். பிரதான பயிராக நெல் உள்ள நிலையில் கடந்த 2018 முதல் போதிய மழை மற்றும் தண்ணீர் இல்லாததால் நெல் விவசாயம் பொய்த்துப் போய் உள்ளது.இதையடுத்து அந்த பகுதியில் சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது கடனாநதி அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் காட்டுப் பன்றி, கரடி, மான், மிளா உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அழகப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேலாயுதம் கூறும்போது, ”2018 ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக மழை மற்றும் தண்ணீர் இல்லாததால் நெல் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுப் பயிராக சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, வாழை உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகிறோம். இவற்றையும் காட்டுப்பன்றிகள், மிளா உள்ளிட்டவை விளை நிலங்களுக்குள் புகுந்து நாசப்படுத்தி வருகின்றன.

நான் எனது வயலில் ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழைப் பயிரில் சுமார் 100க்கும் மேற்பட்ட வாழையை தூருடன் தோண்டி நாசப்படுத்தி விட்டன. காட்டுப்பன்றிகள் குறித்து வனத்துறையிடம் பலமுறை முறையிட்டும் போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சூரிய மின் ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்க விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துப் போன நிலையில் தற்போது பயிர்களும் வன விலங்குகளால் சேதமடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது சிறிதும் மின்வேலி அமைக்க முதலீடு செய்யும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, வேளாண்துறை மூலம் பாதி மானிய விலையில் தரும் சோலார் மின் வேலியை வனத்துறையும் இணைந்து முழு மானியத்தில் வழங்கினால் மட்டுமே தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் மின் வேலி அமைத்து பயிர்களை பாதுகாக்க முடியும், விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்” என்றார்.

நன்றி: தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here