தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகின்ற வாரம் தென்காசி மாவட்டத்தில் மிக கன மழை பெய்திட வாய்ப்புள்ளதாக சென்னை, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அனைக்கட்டுகளிலிருந்தும் நேரடிப் பாசனத்திற்காக ஏற்கனவே 26.11.2020 முதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின் படி மிக கன மழை பெய்ய நேரிட்டால் அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். எனவே பொது மக்கள் அணைகளிலோ, அணைகளின் மறுகால் பகுதிகளிலோ, ஆறுகள், குளங்கள், தனியார் தோட்டங்களில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு குளிப்பதற்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கனமழை பெய்திடும் நேர்வில் எடுக்கப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 34 இடங்கள் மழை நீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி இடங்களில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களை தங்க வைப்பதற்கு 54 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் அபாயகரமாக தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், உடைப்பு ஏற்படும் நிலையில் குளக்கரைகள், கால்வாய்கள், சாய்ந்து விழக்கூடிய நிலையில் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தினை 1077, 04633 – 290548 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவான அறிக்கையை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிக்க: தென் தமிழகத்தில் டிச.2-ல் அதிகனமழை