சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் உத்தரவு!

பைக்கில் சென்றவரை தாக்கிய சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்கு பதியும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சங்கரன்கோவில் மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான், எனது நண்பர் ராமகிருஷ்ணனுடன் கடந்த 22.9.2019 அன்று டூ வீலரில் புளியங்குடி சாலையில் சென்றபோது எங்களை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலைய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், போலீஸ்காரர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் நிறுத்தினர். ஆவணங்கள் இல்லை என்று கூறி என்னை தாக்கியதுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னை இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி ஆகியோர் தாக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்தியபிரபா உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய சங்கரன்கோவில் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது அதே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர். எனவே சங்கரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் புகார் மீது முகாந்திரம் இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். எனவே மனுதாரரின் புகாரை சங்கரன்கோவில் போலீஸ் நிலையம் தவிர்த்து வேறு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும், இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்கவும் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here