சென்னையில் வேகமெடுத்த கொரோனா தொற்று தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது என்று திருப்திபட்டாலும், அதன் தாக்கம்தான் இதுவரையிலும் அமைதியாகவும், தொற்றுகள் குறைந்திருந்த தென்காசி, நெல்லை மாவட்டங்களில் எகிறிக் கொண்டிருக்கின்றன.
சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் திரும்புபவர்களால் தொற்று பரவுவதோடு அவர்களோடு தொடர்பிலிருந்தவர்களின் பாதிப்பு தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத துவக்கத்தில் தென்காசியில் 63, நெல்லையில் 83 என்றளவிலிருந்த தொற்று, இன்றைய லெவலில் தென்காசி 558, நெல்லை 1,300, தூத்துக்குடி 1,416 என பல மடங்கு எகிறிவிட்டது.
நேற்று மட்டும் மூன்று மாவட்டங்களின் தொற்று 213 வரை உயர்ந்திருக்கிறது. மாவட்டங்களில் நிலையாக வசிக்கும் மக்களின் தொற்று அளவு கூட இப்படி எகிறியதில்லை. இவைகள் சொந்தமண் திரும்பியவர்களால் ஏற்பட்ட பாதிப்பின் உயர்வு என்ற அச்சம் தற்போது பரவியிருக்கிறது.
இதனிடையே கொரோனாவின் கொடுங்கரங்களுக்கு கொரோனா வார்டு, மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காவல் பணியாற்றிய காவலர்களையும் விட்டு வைக்கவில்லை. தென்காசி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பின் காரணமாக புளியரை, குற்றாலம், சிவகிரி ஆகிய மூன்று காவல் நிலையங்கள் மூடப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அம்பை அரசு மருத்துவமனை, அம்பை தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களும் மூடப்பட்டுள்ளன.