தென்காசி மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணைப் பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் கார் பருவ சாகுபடிக்கு பாவப்பட்ட நெல் நாற்றுக்கள் மழையின்றி கருகி வருகின்றன. மேலும் கார் சாகுபடி பொய்த்துப் போகும் அபாயம் நிலவுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யத் துவங்கும். வழக்கமாக செங்கோட்டை அருகே அடவிநயினார், குண்டாறு நீர்த்தேக்கங்கள் இந்நேரத்தில் நிரம்பி வழியும். ஆனால் நடப்பாண்டு ஜூன் துவங்கி 38 ஆட்கள் நாட்கள் ஆனபோதும் இதுவரை பருவமழை சரிவர செய்யவில்லை. இதனால் கார் சாகுபடி பொய்த்துப் போகும் அபாயம் நிலவுகிறது.
மேலும் இம்மாத துவக்கத்தில் அடவிநயினார் அணையின் பாசன பகுதிகளான அணையை ஒட்டிய மேட்டுகால், கரிசல்குளம் பகுதி விளைநிலங்களில் கார் சாகுபடிக்காக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் நெல் விதைகளை வாங்கி தங்களது வயல்களில் பாவியிருந்தனர். இவ்வாறு பாவப்பட்ட நெல் நாற்றுக்கள் கடந்த ஒரு மாதமாக மழையின்றி வெயிலில் கருகி வருகின்றன. அத்துடன் நெற்பயிர் சாகுபடி செய்யப்படாமலும், வயல்களில் மற்ற விவசாய பணிகள் தொடங்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் விவசாயிகள் பருவமழையும் பொய்த்து போனதால் விவசாய பணிகள் அனைத்தும் முடங்கிய நிலையில் மேலும் கவலையில் உள்ளனர். இன்னும் 10 நாட்களில் பருவமழை காலதாமதமாக பெய்தால் தற்போது கருகிய நிலையில் உள்ள இந்த நெல் நாற்றுகளை நடவு செய்ய இயலாது.
எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மீது கருணை காட்டி வயல்களில் கள ஆய்வு மேற்கொள்ளவேண்டும். கருகிய நிலையில் நெல் நாற்றுகள் உள்ளதால் மீண்டும் விதைக்க தேவையான நெல் விதைகளை அரசே மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.