குற்றாலத்திற்குள் நுழைந்ததுமே மெல்லிய மழைச்சாரல் முகத்தில் தெளித்து வரவேற்கிறது; இதமான பருவக்காற்று மேனியைத் தழுவி அழைத்துச் செல்கிறது. கோடையில் காய்ந்து கிடந்த மலையடிவாரம் மீண்டும் துளிர்த்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது.
குற்றாலத்தில் இப்போது குளுகுளு சீசன் காலம். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை சீசனில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு அருவியாக படையெடுக்க, வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து செல்லும். உணவகங்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். நடைபாதை வியாபாரிகள் முதல் ரிசார்ட் வைத்திருப்பவர்கள் வரை, இவர்கள் காட்டில் அடைமழை தான்.
மற்ற ஊர் அருவிகளில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் இங்கு 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழலாம். இரவில் பிரமாண்டமான மின் வெளிச்சம் அருவிக் கரையில் பிரகாசிக்க, கிடுகிடுக்கும் குளிரில் குளிக்கும் முரட்டு குளியல் பிரியர்கள் உண்டு. ஆண்டுதோறும் சீசன் காலத்தில் தவறாமல் அட்டடென்ஸ் போடும் ஒரு தனி பட்டாளமும் உண்டு. விடுமுறை நாட்களில் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்து குளித்து வரும் பொறுமைசாலியான குளியல் பிரியர்களும் உண்டு.
இப்படி சீசன் களைக்கட்டி ஆரவாரமாக காட்சியளிக்கும் குற்றாலம், இப்போது கொரோனாவால் களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது. குளிக்கத்தான் நாதியில்லை. இத்தகையதொரு வித்தியாசமான சூழலை குற்றாலத்தில் இதற்குமுன் பார்த்தது இல்லை என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
ஊரடங்கில் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளுக்கு இதுவரை தளர்வு அளிக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகையின்மையால் அவர்களை நம்பி மட்டுமே தொழில் செய்துவரும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.