கானுயிர் காதலி: நெல்லைக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீதேவி!

1974

கேமரா பிடிக்கும் பெண்கள் இன்று சாதாரணமாகிவிட்டார்கள். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கும் ஸ்ரீதேவியும் கேமரா பிடிப்பவர்தான். இவர் கேமராவுக்கு போஸ் கொடுப்பது காடுகளும், காட்டுவாழ் உயிரினங்களும் என்பது மட்டும்தான் வித்தியாசம்.

பள்ளி விடுமுறை நாட்களில் அனைவரும் பொழுதுபோக்குக்காக சுற்றுலாத்தலங்களுக்குத்தான் செல்வார்கள். ஆனால், ஸ்ரீதேவியின் அப்பாவோ காட்டுக்கு அழைத்துசென்றார். அப்படிதான் காடு அவருக்கு அறிமுகமானது.

”கோவையைச் சேர்ந்த சத்தியநாராயணன், சின்னாறு காட்டுக்குள் புகைப்படம் எடுக்கவந்தார். அங்கு கானுலா சென்றிருந்த எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் வைல்ட்ஃலைப் போட்டோகிராபி எடுக்கக் கற்றுத் தந்தார். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்த எனது கணவருக்கு திருநெல்வேலிக்கு இடமாறுதல் வந்ததால் தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறோம்” என்று சுய அறிமுகம் தந்தவர், வைல்ட்ஃலைப் போட்டோகிராபி தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“வால்பாறை, டாப்ஸ்லிப், சத்தியமங்கலம், களக்காடு, முண்டந்துறை, பரம்பிகுளம், முதுமலை, கேரள மாநிலம் மறையூர், மூணாறு, கர்நாடக மாநிலம் பந்திபூர், மகாராஷ்டிர மாநிலம் தடோபா உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று போட்டோகிராபி எடுத்துள்ளேன்.

“வட கிழக்குப் பருவமழைக் காலத்தில் ஐரோப்பிய கண்டத்திலிருந்து நீளச்சிறகு வாத்து (Garganey), பூநாரை (Greater Flamingo), மங்கோலியாவிலிருந்து வரும் பட்டைத்தலை வாத்து (Barheaded Goose) போன்ற பறவைகளைப் பற்றி அறிந்திருக்கிறேன். முதன்முதலில் அவற்றை திருநெல்வேலி குளங்களில் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.

பல முறை யானை என்னை விரட்டியுள்ளது. கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவங்களும் உண்டு. இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த உயிரினம் யானைதான். எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவையும் நம்மைத் தொந்தரவு செய்யாது. குட்டிகளுடன் உள்ள உயிரினங்களை நெருங்கக் கூடாது. தனது குட்டிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவை நம்மைத் தாக்கக்கூடும்.

எனவே, குட்டிகளுடன் உள்ள உயிரினங்களின் அருகில் சென்று ஒளிப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்பவர், வார இறுதி நாட்களில் பள்ளி மாணவ-மாணவிகளைக் காட்டுக்கு அழைத்துச் சென்று விலங்குகள், பறவைகள் பற்றி கற்றுக்கொடுக்கும் சேவையை செய்துவருகிறார்.

ஸ்ரீதேவியின் ஃபேஸ்புக் பக்கம்

இதையும் வாசிக்க: தந்தையை இழந்த 2 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற கடையநல்லூா் எம்எல்ஏ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here