குளிர்ந்த காற்றும் சாரல் மழையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு உணர்ந்த அடையாளங்களாக இருக்கக்கூடும். குற்றாலத்தின் அடையாளமாக அதன் மூலிகை மணமும் வீட்டுக் குத்துபோணியை நிறைக்கும் குளிர்ந்த தண்ணீருமாகவே மனதில் பதிந்து போயிருக்கிறது குற்றாலத்தின் சீசன் நாட்கள்.
கழுத்தில் துண்டைப் போட்டுக்கொண்டு அம்மாவின் கைகளைப் பிடித்து வீதிகளில் இறங்கினால் பேரருவியின் இரைச்சல் மனதை நிறைக்கத் தொடங்கியிருக்கும். குற்றாலம் அருவிகளால் மட்டுமே நிறைந்த ஊர் அல்ல. நினைவுகளால் நிறைந்த ஊர்.
கடலின் ஆர்ப்பரித்துப் பொங்கி வழியும் ஓசைகளின் வழியாகத்தான் குற்றாலத்தின் முகம் தென்காசியின் பெரும்பாலான குழந்தைகளுக்கும் ஞாபகத்தில் இருக்கக்கூடும். பிரவாகம் எடுத்து வரும் பேரருவியின் உள்ளும் புறமும் கூட்டம் முட்டிமோதி அலைபாய, அருவியின் ஓரங்களில் வழிந்துவரும் சிமிண்ட் கால்வாய்கள் அந்தக் குழந்தைகளின் குற்றாலங்களாக உருவெடுத்து நிற்கும். வெறித்துப் பார்க்கும் குரங்குகளும் வேடிக்கைக் காட்டும் குரங்குகளும் வீட்டின் திண்ணைகளின் வழியாக நுழைந்து பிஸ்கட்டைத் தூக்கிச் சென்ற குரங்குகளாகத்தான் காலடியில் சுற்றிக் கொண்டிருக்கும்.
குற்றாலத்தின் மாம்பழங்களும், நாவல் பழங்களும், ஊறவைத்த நெல்லிக்காய்களும் தேன் ஒழுகும் பாலாப் பழங்களும் அந்த நினைவுகளின் நீட்சிகளே. நாவலின் துவர்ப்பும் நெல்லியின் புளிப்பும் பலாவின் இனிப்பும் குற்றாலத்தின் சுவைகளாகவே நினைவுகளில் தங்கி இருக்கின்றன.
முள்முள்ளாக எழுந்து நிற்கும் ரம்புட்டானும், சுருங்கிய பலாப்பழத்தைப் போல் அடுக்கி வைக்கப்பட ஸ்டார் பழமும் டிராகனும் ப்ளம்ஸும் பணக்காரப் பழங்கள் என்றாலும் அவற்றை வாழ்வில் ஒருமுறையேனும் சுவைத்துவிட வேண்டும் என்ற நினைவுகளையே ஐந்தருவியின் பேருந்து நிறுத்தங்கள் தேக்கி வைத்திருக்கின்றன. புலி அருவியின் குகைகளும் செண்பகாதேவியின் பாதைகளும் அங்கு விற்கப்படும் பட்டாணி சுண்டலின் வழியாகவே ஞாபகத்தில் இருக்கின்றன.
குற்றாலத்தின் நினைவுகள் ஒவ்வொன்றும் அதன் அருவிகளைப்போல அதனைச் சுற்றி வாழும் மனிதர்களின் மூலமாகவும் நினைவுகளில் நிற்கின்றன. சன்னதி வீதியில் அல்வா கடை வைத்திருக்கும் சாமி என் நண்பனாக என்னுடன் ஒரே வகுப்பைறையில் அமர்ந்திருப்பவனாக இருக்கிறான். அதே கடையில் இருந்து நான்கு கடை தள்ளி வளையல் கடை வைத்திருக்கும் மாமா என் வீட்டில் இருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்கிறார். யானைப் பாலத்தில் இருந்து ஐந்தருவி வரை மகேந்திரா வேனின் கதவிடுக்கில் தொங்கிக் கொண்டே உறுப்படிகளின் எண்ணிக்கையை மனதில் நிறுத்திய கார்த்தி இன்று அதே பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுகிறான்.
சீசன் அல்லாத நாட்களில் பதினி விற்கும் ஆறுமுகம் அண்ணனும், இளனி விற்கும் முப்புடாதி அண்ணனும் கதவைத் தட்டி “யவராம் இருக்கா” என்று கேட்டுவிட்டே அடுத்த வீட்டின் கதவைத் தட்டுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் முகங்களாக, இவர்களின் புன்னகைகளாகத்தான் குற்றாலம் நினைவுகளில் இருக்கிறது.
கொரோனா நாட்களில் ஆளரவமற்று தனித்து நிற்கும் அருவிகளைப் போலவே சாமியும், கார்தியும், ஆறுமுகம் அண்ணனும் முப்புடாதி அண்ணனும் தனித்து நிற்கிறார்கள். கேரளாவில் இருந்தும் குஜராத்தில் இருந்தும் வரவைத்த வளையல் கட்டுகளை என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்புகிறார் பக்கத்து வீட்டு மாமா. முகத்தை மறைக்கும் முகமூடியை அணிந்துகொண்டு ஆலமரத்து நிழலில் நிற்கும் கார்த்தி யாரை சவாரியாக ஏற்றிச் செல்வதெனத் தெரியாமல் விட்டேத்தியாக நின்று கொண்டிருக்கிறான். வாரங்கள் கடந்து விற்காத நெய் அல்வாவின் மீது கட்டிபோன ஏடாக மாறியிருக்கிறது வாழ்க்கை.
அருவிகளில் வெள்ளம் வந்து குளிப்பதற்குத் தடைவிதித்த நாட்களில் எல்லாம் புலம்பாத மனம் இன்று ஊராடங்கு நாட்களால் விதிக்கப்பட்ட தடையின் மூலமாகப் புலப்பித் தவிக்கிறது. நெல்லிக்காய் விற்ற காசில் மகனுக்கு சிலேட் வாங்கிக் கொடுத்த அண்ணனும், ஆட்டோ ஓட்டிய காசில் கட்டிய மனைவிக்குப் புதுப்புடவை எடுத்துக் கொடுத்த கணவனையும் கொரொனா கோரப் புன்னகைக் காட்டி சிரிக்கும்போது வாழ்வில் இதுவரை இல்லாத அச்சம் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை.
மூலிகை மட்டுமே மணத்துக் கிடப்பதில்லை. குற்றாலத்தின் அருவிகளில் தலை நனைக்கும் அத்தனைத் தலைகளும் மணத்துக் கிடக்கும் ஊர் இது. சீயக்காய் மணமும், ஒரு ரூபாய் ஷாம்பும் கொடுத்த மணம் சன்னதி வீதியைக் கடந்து இறங்கும் போது, வயிற்றுப் பசிக்கு ஒரு வாய் டீயும், அலறி அழும் பிள்ளைக்கு பாதாம் பாலும், முன்பசிக்கு ஒரு கடி மிளாகாய் பஜ்ஜியுமாக அந்த வீதியை நிறைத்து நிற்கும். பால் அல்வாவும் நேந்திரங்க்காய் சிப்ஸும் மலை வாழைப்பழமும், அதிசியச் சித்தர் தயாரித்துக் கொடுத்த களிம்புகளும் ஊருக்குப் புதியவர்களின் பைகளில் நிறைந்து கொண்டிருக்கும். இன்றைக்கு அதே தெரு யாரும்மற்று அநாதையாகக் கிடக்கிறது. வழக்கமாக வந்து செல்லும் மனிதர்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது.
வனமும் பறவைகளும் விலங்குகளும் நம்புவது வசந்தத்தையே. ஊருக்கான வசந்தமும் வந்துவிட்டது. ஆனாலும் அடுப்பு எரியவில்லை. இளனி வெட்டப்படவில்லை. பதினி இறக்கப்பட வில்லை. வளையல் கட்டுக்கள் அவிழ்க்கப்படவில்லை. மற்ற ஊர்களில் மனிதர்கள் தனிமைப்பட்டுக் கிடக்க, இங்கே மட்டும் இயற்கை தனிமைப்படுத்திக் கொண்டதைபோல அமைதியாக நிற்கிறது.
சாமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை சொன்னான். வழக்கமான மக்கள் வராமல் பசியில் அலையும் குரங்குகளைப் பார்க்க மனம் வரவில்லை. நண்பர்களாகச் சேர்ந்து சோறாக்கிப் போடுகிறோம் என்று. நம்பிக்கையின் வெளிச்சம் அவர்களிடத்தில் இருந்தே தொடங்குகிறது.வசந்தம் வராத நாட்களிலும் நம்பிக்கையுடன் காத்திருக்கப் பழகியவர்கள் நாம். வசந்தமே வந்துவிட்டது, நம்பிக்கை மட்டும் கொஞ்சம் தொலைவில் இருப்பதைப்போல் தோன்றுகிறது. அதுவும் ஒருநாள் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். ஆர்ப்பரித்து அரவணைக்கும் அருவி சொல்லும் சேதியும் அதுவாகத்தான் இருக்கக்கூடும்.