குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 3வது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் 3வது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளை மறைத்தபடியும் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் நடைபாதை வரை தண்ணீா் வழிந்தோடியது.
குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.