அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பாபநாசம் படித்துறையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டங்களாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இதன்படி பொது போக்குவரத்து தொடங்கினாலும், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கும் தடை நீடிக்கிறது.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பாபநாசத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பாபநாச சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக பாபநாசத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் அலைமோதியது. அவர்கள் கோயில் முன்புள்ள தாமிரபரணி ஆற்று படித்துறையில் குளிப்பதற்கு போட்டிப் போட்டனர். இதனால் ஏராளமானோர் படித்துறையில் காத்திருந்து புனித நீராடி விட்டு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.