தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு மற்றும் போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்தும் தினமும் லாரி மற்றும் டேம்போக்களில் ரேஷன் அரிசி கடத்துவது நடந்து தான் வருகிறது. நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஜங்ஷனில் இருந்து மேக்கோடு, பளுகல் வழியாக ஒரு மினி லாரி நெடுமங்காடு சென்று காய்கறிகளை இறக்கிவிட்டு பாறசாலை பகுதியில் ஒரு குடோனில் இறக்குவதற்கான அரிசி மூட்டைகளுடன் காரகோணம் வழியாக சென்றுகொண்டிருந்தது.
பளுகல் செக்போஸ்ட்டில் போலீசார் மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது தலா 50 கிலோ கொண்ட 110 பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் ரூ 4 லட்சத்திற்கு மேல் பணம் இருந்தது. நெல்லையை சேர்ந்த டிரைவர் ராசு(41) மற்றும் கிளீனர் பாஸ்கர்(19) என்ற அந்த இருவரிடம் வியாபாரிகள், தென்காசி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றி அனுப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அரிசி, பணம் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்தனர்.