விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன், முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், சுற்றுலா தலங்களாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் மூலிகை வனமாகவும், மருத்துவ குணம் மிகுந்த அருவிகளும் உள்ள குற்றாலத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு இது வரை அனுமதி வழங்கவில்லை. குற்றாலம் அருவிகளில் நீராடினால், நாள்பட்ட நோய்களும் குணமாகும் என்பது அனேக மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அது உண்மையும் கூட.
எனவே வைரஸ் தொற்று பரவலை காரணமாக கூறி அருவிகளில் நீராட தடை விதித்திருப்பது சரியானது அல்ல. அருவிகளில் நீராடினால் நோய்கள் குணமாகும். எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குற்றாலம் செல்வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும் குற்றாலம் வரும் பயணிகளால், தென்காசி மாவட்டம், நெல்லை மாவட்டங்களில் பொருளாதாரமும் மேம்படும். கடந்த ஆறு மாத காலமாக குற்றாலத்தை நம்பி தொழில்கள் செய்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் நலனுக்காகவும், பொருளாதாரம் மேம்படவும் குற்றாலம் செல்வதற்கு பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிக்க: மனம் ஏங்குதே: குற்றால சீசன் நினைவலைகள்!