தென்றல் காற்றும், பூத்தூறலாய் சாரலும் விழும் நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அருவிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு (?) வருகிற 30ம் தேதி வரை தொடரும் நிலையில், ஊரடங்கு முடிந்தாலும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு உடனடியாக அனுமதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே. கொரோனா நோய்த் தொற்று சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அடுத்து வரும் சில மாதங்களுக்கு சமூக இடைவெளி என்பது தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது.
அப்படியெனில் குற்றாலம் அருவியில் சமூக இடைவெளியை மேற்கொண்டு குளிக்க என்னென்ன வகையில் ஏற்பாடுகள் செய்ய முடியும்? கொரோனா நோய்தொற்று வந்த நபர்கள் யாரேனும் அருவியில் குளித்து விட்டால் அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? அவருடன் நின்ற, பழகிய, பேசிய, தொடர்பு வைத்திருந்த நபர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது போன்ற சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பொதுநல மருத்துவர் ஒருவர் கூறும்போது, ‘’பொதுவாக 70% நோய்கள் தண்ணீரின் மூலம்தான் பரவுகின்றன. ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் ஜீரம், காலரா, மஞ்சள் காமாலை போன்றவை தண்ணீர் மூலம் பரவும் நோய்கள். ஆனால் கொரோனா நோய் தொற்று தண்ணீர் வழியாகப் பரவுவது இல்லை.
பொதுவாக கொரோனா வைரஸ், தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இருமல் மற்றும் தும்மல் வரும்போது வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலமாகவும் நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் போதும் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது. எனவே, அருவி நீரில் குளிப்பதனால் கொரோனா பரவ வாய்ப்பில்லை. காரணம் அருவி நீர், மனிதர்கள் புழங்காத மலையிலிருந்து கீழே கொட்டுகிறது. மேலும் குற்றால அருவி நீர் மூலிகை கலந்த தண்ணீர் என்பது கூடுதல் தகவல். எனவே இங்கே பிரச்சினை அருவி நீர் அல்ல, தனிமனித இடைவெளி தான்.
கொரோனா தொற்று உள்ளவர் நெருக்கமாக நின்றபடி தண்ணீரை நம் மீது கொப்பளித்தாலோ, இருமினாலோ நோய் பரவும் வாய்ப்புள்ளது. அதேபோல் குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளிக்கும் வழக்கம் உள்ளது. அப்படி வரிசையில் பாதுகாப்பான இடைவெளியின்றி நெருக்கமாக நிற்கும்போதும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே வரிசையில் நிற்கும்போது, குளிக்கும்போதும் தனிமனித இடைவெளியை பின்பற்றி நடந்தால் அருவிகளில் தாராளாமாக குளிக்கலாம்.
குற்றால அருவிகளில் சீயக்காய், சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதற்கு நீதிமன்ற தடை உள்ளது. ஒருவேளை குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சீயக்காய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதற்கு தற்காலிகமாக அனுமதி கொடுக்கலாம். அது குளிப்பவர்களுக்கு இன்னும் பாதுகாப்பானது’’ என்கிறார் அவர்.
இதையும் படிக்க: ஆர்ப்பரிக்கும் அருவிகள்; ஆரவாரமில்லாத குற்றாலம்!