குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
குற்றாலம் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், ஸ்ரீபதி உள்ளிட்டோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக குற்றாலத்தில் தனியார் விடுதிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் மூடப்பட்டன. விடுதிகள் மூடப்பட்டதால், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து இடங்கயிலும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் விடுதிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. ஆனால், குற்றாலத்தில் தங்கும் விடுதிகளைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், விடுதி உரிமையாளர்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் விடுதிகள் பராமரிப்புப் பணிக்காக அதிகமான தொகையை செலவிட்டுள்ளோம். ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் சம்பளம், மின் கட்டணத்தை செலுத்த மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம். ஏற்கெனவே சாரல் சீஸன் கடந்துவிட்ட நிலையில், தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
விடுதி உரிமையாளர்கள் மேலும் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தாலும் இனி வரும் நாட்களில் கூட்டம் குறைவாகவே இருக்கும். எனவே, விடுதிகளைத் திறப்பதால் கரோனா பரவல் அச்சம் இருக்காது. விடுதிகள் செயல்பட அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்றனர்.
இதையும் படிக்க: ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? – சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு