நெல்லை மாநகர பகுதியில் டீக் கடைகளுக்கு காலை மூன்று மணி நேரம் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் பத்து மணி நேரம் செயல்படுகிறது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின்போது பல பகுதிகளில் டீக்கடைகளில் பொதுமக்கள் அவசியமின்றி அதிகளவில் கூடுவது கண்டறியப்பட்டது.
பொதுமக்களின் இத்தகைய செயலால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிகழ சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி வரும் காலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே டீக் கடைகள் செயல்பட அனுமதித்து ஆணையிடப்படுவதாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்தார்.
ஆனால் நெல்லை மாநகரம், நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என 10 மணி நேரம் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டீக்கடைகள் மூலம் கொரோனா பரவும் சூழ்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் கொரோனா பரவவில்லையோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.