இடைவிடாத பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் கேரளாவின் சில பகுதிகள் உருக்குலைந்து போகின்றன. இதற்கிடையில், செலவு செய்து தங்கள் வீடுகளை கட்டிய பலர் பயத்தோடும் எச்சரிக்கையோடும் உள்ளனர்.
இப்படி தீவிர வானிலை மாறுதலால் முன்னேற்பாடாக, சேதத்தை குறைக்கும் விதமாக புதுமையான கட்டிட வடிவமைப்புகள் அல்லது கட்டுமான முறைகளை பலரும் நாட தொடங்கியுள்ளனர். அப்படி ஒருவர் தான் எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆச்சாரி.
வெள்ளம் ஏற்படும் சமயத்தில் தண்ணீரின் அளவு உயரும் போது, இவர் வடிவமைத்த வீடு தண்ணீரில் மிதக்க தொடங்கிவிடுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இவரது வீட்டை வெள்ளத்தடுப்பு வீடாக கருத முடியாது.
இதுகுறித்து ஆச்சாரி நம்மிடம் விளக்குகையில், “பாறைகள், மணல் ஆகியவற்றை எடுக்க கடந்த ஐந்து வருடங்களாக கேரளாவின் கட்டுமானத் துறை பிரச்சனையை சந்தித்து வருகிறது. ஆகவே, விலை குறைவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை நாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முதலில், ஸ்டீல் பைப் மற்றும் பல அடுக்கு மரப்பலகைகள் பயன்படுத்தி மாதிரி வீடு ஒன்றை கட்டினேன். இதை கட்டி முடிக்க ஐந்து வருடங்கள் ஆனது. ஆனால் அடுத்த வருடமே கேரளாவில் வெள்ளம் வந்தது. இதனால் வெள்ளக் காலத்திலும் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் வடிவமைப்பில் சற்று மாறுதல் செய்தேன்.
வீட்டின் அடித்தளத்தில் காற்று நிரப்பிய தொட்டிகள் பொருத்தியுள்ளதால் வீடு மேலெழும்ப அது உதவி செய்கிறது. தண்ணீரின் அளவு உயரும் போது வீடும் தண்ணீரின் அளவுக்கு ஏற்றார்போல் உயர்கிறது.
வெள்ள நீரில் வீடு அடித்துச் செல்லாமல் தடுப்பதற்கு சுவரின் ஒவ்வொரு மூலையிலும் உலோகத் துண்டுகளை பொறுத்தியுள்ளேன். இவை 25 அடிக்கு கீழே பொறுத்தியுள்ளதால் வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியேயோ தெரியாது. உலோகத் துண்டின் உட்புற கம்பிகளில் வீடு நிற்பதால், தண்ணீர் உயரும்போது வீடும் தானாகவே உயரும். மறுபடியும் தண்ணீர் குறைந்த பிறகு வழக்கமான நிலைக்கு தானாகவே வந்துவிடும்.
இந்த வடிவமைப்பில் நிலத்திலிருந்து 15 அடிக்கு மேல் பிஸ்டன் இருக்கும். ஆகையால், வீட்டை பாதுகாப்பாக 10 அடிக்கு நகர்த்த முடியும். பிஸ்டனின் உயரத்தை எந்த அளவிற்கும் உயர்த்தலாம். ஆனால் பிஸ்டனின் பலமும் நீளமும் சேர்ந்தாற்போல் அதிகரிக்க வேண்டும்.
களிமண், கற்கள், டைல்ஸ், சிமெண்ட் அல்லது மரக்கட்டைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. ஒட்டுமொத்த கட்டமைப்பும் ஸ்டீலில் தான் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் மரப்பலகையை கொண்டு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பலகைக்கு இடையே காற்று புகுவதற்காக 1.5 இன்ச் அளவிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இது வீட்டின் தட்பவெப்ப நிலையை குறைக்கும்.
தொட்டிகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அடித்தளமும் மரப்பலகையை கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த வீடு அலுமினிய ஷீட்டால் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் கூரைக்கு எந்த பொருளையும் பயன்படுத்தலாம்.
நல்ல தரமான ஜிஐ பைப் பயன்படுத்தினால் ஒரு சதுர அடிக்கு 1,600 ரூபாய் செலவாகும். பொருட்களின் தரத்தில் தான் எந்த சமரசமும் செய்யவில்லை. 1,300 சதுர அடி கொண்ட இந்த வீட்டை கட்ட எனக்கு நான்கு மாதங்கள் ஆனது. வெல்டிங், மர வேலைகள் மற்றும் குழாய் அமைப்பதற்கு தேவையான திறமையான பணியாளர்களை தவிர குறைவான வேலையாட்களே இந்த கட்டுமானத்திற்கு தேவைப்படுவார்கள். கட்டுமான சமயத்தில் நான்கு வெல்டிங் நிபுணர்கள் முழு நேரமாக பணியாற்றினார்கள். மர வேலைகள், மின்சாரப் பணிக்கு மற்றும் பிளம்பிங் வேலைக்காக சில நாட்கள் பணியாற்றினர்.
இந்த வீடு ஆறு டன் எடை இருந்தாலும் வீட்டை உயர்த்த காற்று நிரப்பிய தொட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சிமெண்ட் மூலம் கட்டப்படும் வீட்டை விட இந்த வீட்டை கட்டுவதற்கு 30%-க்கும் குறைவான தொகையே செலவாகும். இதை 15 லட்சத்தில் கட்டி முட்டித்துவிட்டேன். முக்கியமாக இந்த வெள்ள தடுப்பு வீடுகளை எந்த மணலிலும் கட்டலாம். குட்டநாடு போன்ற வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக மாதிரி வீடு ஒன்றையும் வடிவமைத்துள்ளேன். பல பிஸ்டன்களில் தாங்கி நிற்கும் சற்று உயரமான வீடு இது’’ என்கிறார் ஆச்சாரி.
இவரது வீடு இணையத்தில் வைராலனதும், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பகுதிகளிலிருந்து கட்டிட பொறியியலாளர்கள், கட்டிட கலைஞர்கள், மாணவர்கள் என இதுவரை 300-க்கு மேற்பட்டவர்கள் இந்த வீட்டை பார்க்க வந்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் குறித்து ஆச்சாரியாவிடம் கேட்க வருபவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காக தனது வீட்டின் முன் சிறிய மாதிரி வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
“வீட்டை பார்க்க வந்த அனைவருக்கும் விரிவான விளக்கம் கொடுத்துள்ளேன். இந்த மாதிரியை பயன்படுத்தி சிலர் வீடுகள் கட்டியுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். எனது பரிசோதனை மக்களுக்கு உதவியாக இருப்பது எனக்கு சந்தோஷமே. ஆர்வமுள்ளவர்களுக்கு விபரத்தை பகிர தயாராக உள்ளேன்” என்கிறார் ஆச்சாரி.