‘’ஒரு மனிதன் எப்படி இப்படி ஆடமுடியும் என்று வியக்கிறேன். அவர் எப்போதெல்லாம் பேட்டிங் பிடிக்க வருகிறாரோ அப்போதெல்லாம் சதமடிப்பார் என்று எனக்கு தெரிகிறது…’’ விராட் கோலி குறித்து வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் உதிர்த்த வார்த்தைகள் இவை. உண்மையில் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் மனநிலையும் இப்படித்தான் இருக்க முடியும்.
ஆம். சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கோலி ஒவ்வொரு சதமடிக்கும் போதும் சாதனைகள் பல தகர்ந்து போகின்றன என்பதுதான் அவரது ஸ்பெஷல்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை விரைவாகக் கடந்த கேப்டன் என்ற புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார் விராட் கோலி. ஆஸ்திரேலியா அணி உடனான ஒருநாள் இறுதிப் போட்டியில் இச்சாதனையை பதிவு செய்துள்ளார். முன்னதாக அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனை எம்.எஸ்.தோனி (127 இன்னிங்ஸ்) வசமிருந்தது. அதை முறியடித்து தற்போது வெறும் 82 இன்னிங்ஸ்களில் கடந்து இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அவர்.
சச்சின் தெண்டுல்கர் ஓய்வின்போது கிரிக்கெட்டின் கடவுள் ஒய்வு பெற்று விட்டதாக எழுதித் தீர்த்தன பத்திரிகைகள். சச்சினின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றே நம்பினர் ரசிகர்கள். ஆனால் நவீன கிரிக்கெட்டின் பிதாமகனாக உருவெடுத்து நிற்கிறார் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியில் கோலியின் வருகைக்கு முன்பு இருந்த நட்சத்திர வீரர்கள் அனைவரும் சேஸிங்கில் அவ்வளவு பங்களிப்பு அளிப்பது கிடையாது. முதல் பேட்டிங்கில் அசத்தும் நாயகர்களாகவே இருந்திருக்கிறார்கள். 300 ரன்கள் சேஸிங் என்பது ஒரு காலக்கட்டத்தில் இந்திய அணிக்கு எப்போதாவது ஒருமுறை மட்டுமே நடக்கும். ஆனால் கோலியின் நுழைவுக்குப் பின்னர் அது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித ஸ்கோராக இருந்தாலும், அதற்கேற்ப தனது பேட்டிங்கை தகவமைத்துக் கொள்கிறார் கோலி.
உள்நாட்டு மண்ணில் சதங்களை விளாசும் வீரர்கள் வெளிநாட்டு மண்ணில் மண்ணை கவ்வி திரும்புவதுதான் இந்திய ரசிகர்கள் கண்ட கிரிக்கெட். ஆனால் கோலிக்கு உள்நாடு, வெளிநாடு அனைத்தும் ஒன்றாகவே உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இன்றுவரை கோலி அடித்துள்ள 43 சதங்களில் 24 சதங்கள் வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை என்பதே கோலியின் பேட்டிங் திறனுக்கான எடுத்துக்காட்டு.
இந்திய அணியின் ஓபனிங் பேட்மேன்களின் விக்கெட்டுகள் சரிந்த நேரங்களில் எல்லாம் கோலி தனிநபராக நின்று வெற்றிக்கு அழைத்துக் கொண்டு வந்த ஆட்டங்கள் ஏராளம். ‘‘பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அதிக சுமை ஏற்றவிடாதபடி கவனமாக விளையாடுபவர் கோலி’ என தோனியே ஒருமுறை புகழ்ந்து கூறினார். கோலி ரன் குவிக்க தொடங்கிவிட்டால், அல்லது விக்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்து விட்டால் எதிரணியால் இவரை எளிதில் கட்டுப்படுத்த முடியாது.
கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் சச்சினோடு ஒப்பிட்டு கோலியை கொண்டாடுகிறார்கள். ஆனால் சச்சினுக்கு முற்றிலும் மாறுபட்டவர்தான் கோலி. ஆட்டத்தில் சச்சினின் அணுகுமுறையை காட்டிலும் நூறு மடங்கு ஆக்ரோஷமானது கோலியின் அணுகுமுறை. தனக்கு கிடைத்த தருணங்களில் எல்லாம் சாதித்தவர் சச்சின் என்றால், தருணங்களை உருவாக்கி சாதிக்கத் துடிப்பவர் கோலி.
களத்தில் கோலி இருக்கும்வரை அது எதிரணியினருக்கு கலக்கம்தான். பேட்டிங் சமயத்தில் மட்டுமல்ல ஃபீல்டிங் செய்யும்போது கோலியின் அணுகுமுறை சக வீரர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதாகவே இருக்கும். டி2, ஒருநாள், டெஸ்ட் என எந்தவகை போட்டியாக இருந்தாலும் சரி கோலியின் அர்ப்பணிப்பு நூறு சதவீதம் இருக்கும். அதுதான் அவரை கிரிக்கெட் உலகில் சாதனையாளராக வலம்வர காரணமாக இருந்திருக்கிறது. இதற்காகவே ஐசிசி சார்பில் கோலிக்கு சிறந்த கிரிக்கெட் உணர்வோடு விளையாடியதற்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.
விராட் கோலிக்கு இது முக்கியமான ஆண்டு. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதியில் தோல்வியுற்று வெளியேறியது கோலி தலைமையிலான இந்திய அணி. இச்சூழலில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளவுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை கைப்பற்ற வேண்டிய நிர்பந்தம் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.