நெல்லை மாநகரில் தனியார் பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயங்கத் தொடங்கின.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து அனைத்து வழித் தடங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர்.
இதனால் நெல்லை மாநகரில் ஒரு சில தனியார் மினி பஸ்கள் இயங்கின. அதுபோல்
தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட சில வழித்தடங்களில் மட்டும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் நேற்று மாநகர பகுதியில் கூடுதல் தனியார் பஸ்கள் இயங்கின. நெல்லை மாநகரில் தனியார் பஸ்களையும் அடுத்து வரும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே தகுதி சான்றுகள் பெறுவது, காலாண்டு சாலை வரி போன்ற நியதிகளில் இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக முழு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்து டீசல் விலை உயர்வும் தங்களை பாதித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.