மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் ஆண்டு தோறும் தண்ணீர் விழும். இந்த அருவிகளில் குளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா ஊரடங்கை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
ஆனால் கொரோனா ஊடரங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த 2 அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி கிடைக்காததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்து உள்ளனர். ஆனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: இயற்கைக்கு ரொம்ப பக்கமாய்… மாஞ்சோலை பயணம்..