வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்!
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் மலையடிவார கிராமம். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம், கூலி தொழில் செய்து வருகின்றனர்.
பலரது வீட்டில் ஆடு, மாடு, நாய்கள் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
வனப்பகுதியிலிருந்து அவ்வப்போது கிராமத்திற்குள் புகும் சிறுத்தைகள் ஆடு, நாய்களை குதறுவதும், இங்குள்ள வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்கதிர்களை நாசமாக்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மார்ச்சில் சிறுத்தைகளை பிடிப்பதற்காக பாபநாசம் வனத்துறையினர் இப்பகுதியை அடுத்த வேம்பையாபுரத்தில் கூண்டு வைத்தனர். 2 மாத இடைவெளியில் 6 சிறுத்தைகள் தொடர்ச்சியாக கூண்டில் சிக்கின. இவைகளை பாபநாசம் வனத்துறையினர் காரையாறு வனப்பகுதியில் விட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பதியாபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த வி.கே.புரம் தனியார் மில்லில் பணியாற்றும் சுப்பிரமணியன் (56)என்பவரது வீட்டுக் கொட்டகையில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப் பட்டிருந்த ஆடுகளில் ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் ஒரு ஆட்டை வனப்பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளது. ஒரு ஆட்டை குதறிய நிலையில் வீட்டிலேயே போட்டு விட்டு சென்றது.
நேற்று காலை சுப்பிரமணியன் எழுந்து பார்த்த போது, கொட்டகைக்குள் ஒரு ஆடு குதறிய நிலையில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். மற்றொரு ஆட்டை காணவில்லை தேடிப்பார்த்தபோது அந்த ஆட்டின் ரத்தம், குடல்பகுதி ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடப்பதைக் கண்டார். உடனடியாக பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனக் காப்பாளர்கள் தருணியா, சாந்தா மற்றும் வனக் காவலர் செல்வம் ஆகியோர் சிறுத்தை கடித்துச் சென்ற ஆட்டின் உடலையும், சிறுத்தையின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், ‘சில மாதங்களாக ஓய்ந்திருந்த சிறுத்தை மீண்டும் தனது அட்டகாசத்தை தொடங்கியுள்ளது. இரவில் வெளியே நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் எங்கள் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும். இப்பகுதியில் மின்வேலி அமைத்து சிறுத்தைகள் ஊருக்குள் புகாதவாறு நிரந்தத் தீர்வு காண வேண்டும்.’ என்றனர்.