மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு வழங்கப்பட்டது.
டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த விருதை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
கழிவறை கட்ட இடவசதி இல்லாத குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பயன்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், சமுதாய பொது கழிவறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொது கழிவறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிக்கிறது. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு சிறப்பு விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் விருதுகளை காணொலி காட்சி மூலம் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு சிறப்பு விருது காணொலிக் காட்சி மூலம் வழங்கப்பட்டது.
இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருடன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: யார் இந்த ஷில்பா பிரபாகர் சதீஷ்?