மாஞ்சோலை எஸ்டேட்டின் குத்தகை கதை..

2050

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவின் கீழ் இருக்கிற மலைவாசஸ்தலம் மாஞ்சோலை. இந்தப் பகுதி முழுவதும் மரக்காடுகளாலும் தேயிலைக் காடுகளாலும் பரந்து விரிந்து கிடக்கிறது. மாஞ்சோலையை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) என்கிற தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மாஞ்சோலை மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளை BBTC நிறுவனம் அமைத்துள்ளது. இதன் வரலாறு இரண்டு நூற்றாண்டுக்கு முன் இருந்து தொடங்குகிறது.

அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும்.


1948 ஆம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டது. இதன் குத்தகை காலம் 2028 வரை அமலில் உள்ளது.

1977 ஆம் வருடம் அரசு மேற்கண்ட 22000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி காட்டை காப்புக் காடாக மாற்ற, தமிழ்நாடு வனச்சட்டம் மூலம் அறிவிக்கை செய்தது. ஆனால் பிபிடிசி நிறுவனம் தன்னுடைய குத்தகை நிலத்தைக் காப்புக்காடாக மாற்றக் கூடாது எனவும் தனக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என்றும் பல்வேறு வகையில் கடிதங்கள் மூலமும், நீதிமன்றம் மூலமும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்த வனப்பகுதியைக் காப்புக்காடாக மாற்ற முடியாமல் வன நிர்ணய அலுவலர், வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டார்கள்.

(ரயத்வாரி பட்டா என்றால் என்ன? ஜமீன்தார் யாருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்திருக்கிறாரோ அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் அந்த நிலங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டாவின் பெயர் ரயத்வாரி).

இந்தப் பட்டாவை கேட்டுத்தான் வனத்துறைக்கு எதிராக BBTC நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

1979 ஆம் வருடத்தில் அப்போதைய வன நிர்ணய அலுவலர், பிபிடிசி இன் மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு விட்டு இதர சிங்கம்பட்டி காடுகளைக் காப்புக்காடாக அறிவிக்க ஆணை வழங்கினார். இதை எதிர்த்து வனத்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வன நிர்ணய அலுவலர் வழங்கிய ஆணைக்குத் தடை வழங்கியது. வன நிர்ணய அலுவலர் மீண்டும் முறையாக விசாரித்து ஆணை வழங்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பதறிப் போன பிபிடிசி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது.


1999 ஆம் வருடம் வரை அந்தத் தடை ஆணை நீக்கப்படவில்லை. பின் 1999 ல் உயர் நீதிமன்றம் தடை ஆணையை நீக்கி ஆறு மாதத்திற்குள் வன நிர்ணய அலுவலர் புதிதாக விசாரணை செய்து ஆணை வழங்க உத்தரவிட்டது. ஆனால் 2009 ஆம் வருடம் வரை வன நிர்ணய அலுவலரால் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை. ஏதோ ஒரு வகையில் BBTC நிறுவனம் தன்னுடைய பலத்தால் எல்லா வழிகளையும் அடைத்து வைத்திருந்தது.

இவ்வழக்கு குறித்து வழக்கில் தொடர்புடையவரும் இப்போது ஓய்வு பெற்றிருக்கும் முன்னாள் வன அலுவலர் பத்திரசாமி கூறுகையில், “2007 ஆம் வருடம் என்னோடு சேர்த்து அப்போது பணியில் இருந்த வனத்துறை கள இயக்குநர் திரு ராம்குமார், மற்றும் துணை இயக்குநரான திரு து.வெங்கடேஷ், ஆகியோர்களின் சீரிய முயற்சியினால் 2010 ஆம் வருடம் (6.1.2010) வன நிர்ணய அலுவலர் மேற்கண்ட 22000 எக்டர் (பிபிடிசி குத்தகை நிலம் உட்பட) காட்டைக் காப்புக்காடாக மாற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

பிபிடிசி நிறுவனம் இந்த உத்தரவுக்குத் தடை ஆணை பெறாமல் இருக்க அப்போதைய துணை இயக்குநர் திரு து.வெங்கடேஷ் அவர்கள் உடனடியாக கேவியட் மனுவை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். ஆகவே அப்போது பிபிடிசி நிறுவனத்தால் தடை ஆணை ஏதும் பெறமுடியவில்லை. ஆனால், வன நிர்ணய அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிபிடிசி நிறுவனம் 2010 இல் மாவட்ட நீதிமன்றம் , திருநெல்வேலியில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2015 ல் மாவட்ட நீதிமன்றம் பிபிடிசி நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறபித்தது.


எல்லாம் கைவிட்டுப் போக பிபிடிசி நிறுவனம் மதுரை உயர் நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு செய்தது. 1.9.17 அன்று அந்த வழக்கையும் தற்போது தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி சிங்கம்பட்டி வனப்பகுதியைக் காப்புக்காடாக அறிவிக்க எந்தச் சிக்கலும் இருக்காது. மேற்கண்ட இந்த நிகழ்வு நடைபெற 40 வருடங்கள் ஆகியுள்ளது என்கிறார்.

மாஞ்சோலை நிலம் குத்தகைக்கு விடப்பட்ட ஆண்டான 1929 ஆம் ஆண்டு குறிப்பிட்ட நிலம் காட்டுப்பகுதியாக இருந்திருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் விவசாய நிலமாக இல்லை. BBTC நிறுவனம் குத்தகைக்கு எடுத்த பிறகே காட்டுப் பகுதியை அழித்து தேயிலை பயிரிட்டிருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரயத்துவாரி பட்டா வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இதையும் படிக்க: மாஞ்சோலை – அழகின் எல்லை இதுவோ!

01/09/2017 அன்று நீதிமன்ற உத்தரவில் ‘குத்தகை ஒப்பந்த காலம் முடியும்வரை, நிலத்தை நிறுவனம் அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை மனுதாரருக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. மனுதாரர் தற்போது அனுபவித்துவரும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சாகுபடி செய்யலாம். அதைத் தவிர்த்து, பரப்பளவை விரிவாக்கம் செய்யக் கூடாது. குத்தகை ஒப்பந்த விதிகளை மீறினால், அதை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வாழ்க்கை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here