கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசிக்கு கொண்டு வரப்படும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அய்யப்பனின் ஐந்துபடை வீடுகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி முதல் தேதி முதல் 10-ந் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறும்.
இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி கார்த்திகை மாதம் கடைசி நாள் அன்று புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டக அரங்கில் இருந்து அதற்கென பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேவசம்போர்டு அதிகாரிகள் தலைமையில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் புறப்படும்.
இந்த ஆபரண பெட்டி கேரள மாநிலம் ஆரியங்காவு வழியாக தமிழகத்தை அடைந்து தமிழக மற்றும் கேரள போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தமிழக பக்தர்களும் தரிசிக்க வேண்டும் என்று தென்காசி கொண்டு வரப்படுவது வழக்கம். தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பு ஆபரண பெட்டி கொண்டு வரும் வாகனம் நிறுத்தப்படும். அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆபரண பெட்டி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆபரண பெட்டி புனலூரில் இருந்து புறப்பட்டு நேரடியாக அச்சன் கோவிலுக்கு சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாக நடைபெறும் மண்டல மகோற்சவ விழா பூஜைகள் அனைத்தும் கோவில் வளாகத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன் தெரிவித்தார்.
கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இ-பாஸ் எடுத்து வந்து அய்யப்பனை தரிசித்து செல்லலாம். மேலும் கோவிலில் தினமும் இருவேளை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜைக்கு பின்னும், மதியம் 12 மணி உச்சிகால பூஜைக்கு முன்னும் 11.30 மணி அளவில் நெய் அபிஷேகம் நடைபெறும். மாலை அணிந்த பக்தர்கள் இ-பாஸ் எடுத்து, உரிய நேரத்திற்குள்ளாக வந்து தங்களது நெய்யை ஒப்படைத்து நெய் அபிஷேகம் செய்து வாங்கிச் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி – கலெக்டர் சமீரன் தகவல்