கந்த சஷ்டி 2020: அழகு முருகனின் அருள் கூறும் 7 சிறப்புத் தகவல்கள்!

867
Kantha-Sasti-Special-Nov-20-2020
Kantha-Sasti-Special-Nov-20-2020

வேலாயுதத்திற்கு மிஞ்சிய மேலாயுதமென்ன?

அன்னை ஆதிசக்தியே வேலின் வடிவாய் முருகப்பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்றாள். வேலை வழிபட்டால் மலைமகள், திருமகள், கலைமகள் மூவரையும் வழிபட்ட பலன் உண்டாகும் என்கிறார் அருணகிரிப்பெருமான். வேலின்றி முருகனை பூசித்தால் விடையேதும் கிட்டாது என்றும் சொல்கிறார். ‘வெல்’ என்ற தொழிலின் அடையாளமாக எழுந்ததே வேல் என்ற ஆயுதம். முருகனின் திருவடியில் திகழும் வேலை வணங்கினால் முருகப்பெருமானின் திருவடியை அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு. முருகப்பெருமானுக்காக அன்னை சக்தி உருவாக்கித் தந்த வேலை முருகனின் தங்கை என்று போற்றும் வழக்கமும் உண்டு. ‘சூர்மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து’ என்று வேலைத் தொழுகிறது அகநானூற்றுப் பாடல் ஒன்று.

Kantha-Sasti-Special-Nov-20-2020
Kantha-Sasti-Special-Nov-20-2020

ராமபிரானுக்கு ஓதப்பட்ட ஸ்கந்த புராணம்!

வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் விசுவாமித்திர மகரிஷி ராம லக்ஷ்மணருக்கு முருகப்பெருமான் உற்பத்தியான குமார சம்பவத்தை விரிவாகச் சொல்கிறார். இறுதியில் ‘சகலத்தையும் அளிக்கும் குமார சம்பவக் கதையை சொன்னேன். அப்பா! காகுத்ஸா, இந்த பூலோகத்தில் ஒரு மனுஷ்யன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்து விட்டால் போதும். தீர்க்காயுள், புத்ர, பௌத்ர சௌபாக்கியம் எல்லாம் கிட்டி, முடிவில் ஸ்கந்த லோகத்தில் இன்ப வாழ்வைப் பெறுவான்’ என்கிறார் விசுவாமித்திரர்.

பழுத்த பழம் முருகன்!

பூ, பிஞ்சு, காய் என்ற நிலையைத்தாண்டி உருவாவதே பழம். முருகப்பெருமானும் சிவசக்தியின் அருளால் குழந்தை உருவிலேயே கனிந்து பழமாகி ஞான பண்டிதனாக உருவானவன். அவனை வேத மந்திரங்களே முழுமையாக போற்ற முடியவில்லை என்பதால் வேத மாதாவே முருகனின் அனுகிரக மகிமைகளை வியந்து ‘சுப்பிரமண்யோம்’ என்று மும்முறை கூறிவிட்டு நிறுத்திவிடுகிறாள் என்பார்கள். முருகப்பெருமான் பாலவடிவில் திருவிளையாடல் புரிந்த இடம் பழநி என்றானது. அதனால் ஞானவடிவான பழநிநாதனை வாக்காலும், சிவபெருமானை வணங்கும் திருச்செந்திலாண்டவனை மனதாலும், திருத்தணிகை வேலவனை உடலாலும் வணங்க வேண்டும் என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். பழநி என்ற சொல்லே திருமந்திரம் என்றும் போற்றுகிறார்.

கந்தனைத் தவிர கற்றவர் யார்?

Kantha-Sasti-Special-Nov-20-2020
Kantha-Sasti-Special-Nov-20-2020

எல்லாம் கற்றவன் என்ற செருக்கு நம்மில் பலருக்கும் அவ்வப்போது எழுந்துவிடலாம். அதை கேலிசெய்து கண்டிக்கிறார் கச்சியப்பர். வேதங்களால் சகல ஜீவன்களையும் படைக்கும் நான்முகனுக்கு பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. ஞான உருவான முருகப்பெருமான் அந்த ஓரெழுத்துக்குரிய பொருளை சகலமும் அறிந்த ஈசனுக்கு உணர்த்தினார். ஓரெழுத்துக்கே விடை தெரியாத நான்முகனுக்கு சகலமும் உரைத்த கந்தனின் முன்னால் எவர்தான் கற்றவர், எவர்தான் பண்டிதர் என்று வியக்கிறார் கச்சியப்பர்.

கந்தன் காலடியை வணங்கினால்..!

‘மு’ என்றால் முகுந்தனான திருமாலையும், ‘ரு’ என்றால் ருத்ரனையும், ‘க’ என்றால் கமலவாசனான நான்முகனையும் குறிக்கும். தேவர்கள் மூவரும் இணைந்த சொரூபமே முருகப்பெருமான் என்கிறார் அருணை வள்ளல். அப்படியே ‘க’ என்பதில் உள்ள அகாரம், ‘ரு’-வில் உள்ள உகாரம், ‘மு’-வில் உள்ள மகாரம் இணைந்தால் வருவது ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம். ஆம், பிரணவமே முருகப்பெருமான்தான் என்கிறார் அருணகிரிநாதர்.

முருகப்பெருமானின் 25 ஆயுதங்கள்..!

முருகப்பெருமானின் ஆயுதங்கள் காக்க வல்லவை. தீயோர்க்குப் பகையாகும் ஆயுதங்களே நல்லோர்க்குக் கவசமாக விளங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அவை… 1. வேலாயுதம் 2. கோழிக் கொடி 3. அங்குசம் 4. பாசம் 5. வில் 6. அம்பு 7. கத்தி 8. கேடயம் 9. வாள் 10. கோடாரி 11. சூலம் 12. கதை 13. சங்கம் 14. சக்கரம் 15. வஜ்ரம் 16. தண்டம் 17. உளி (டங்கம்) 18. தோமரம் (உலக்கை) 19. கரும்பு வில் 20. மலரம்பு (வல்லி) 21. மணி 22. ஜபமாலை 23. கமண்டலம் 24. தாமரை 25. சுருவம். இவை மட்டுமின்றி பூரண கும்பம், நீலோத்பலம் ஏந்திய முருகப்பெருமானையும் சில ஆலயங்களில் நாம் தரிசிக்கிறோம்.

முருகனே ஆண் பிள்ளை..!

Kantha-Sasti-Special-Nov-20-2020
Kantha-Sasti-Special-Nov-20-2020

சிவபெருமானிடம் இருந்து அதாவது ஆணிலிருந்து தோன்றிய முருகப்பெருமானே ஆண் பிள்ளை என்றும் மற்றவர்கள் அத்தனை பேரும் பெண் பிள்ளைகள் என்றும் (பெண்ணிலிருந்து தோன்றியதால்) வாரியார் ஸ்வாமிகள் கூறுவார். ஈஸ்வரனிடமிருந்து முதலாவதாகத் தோன்றியவர் முருகனே. ‘யாதே ருத்ர சிவா தனூ :’ என்கிறது ருத்ர மந்திரம். ‘படைத்தலைவர்களில் நான் சுப்பிரமணியன்’ என்று கீதையில் கண்ணன் கூறுகின்றார். பிதாமகர் பீஷ்மர் படைத் தலைமையை ஏற்கும் முன் முருகனை வேண்டிக் கொண்டதாக பாரதம் உரைக்கின்றது. ‘ஓம்’ காரத்தின் முழுப்பொருளாக விளங்குபவன் முருகன். அவனே சகல தேவர்களையும் உள்ளடக்கிய மகாசக்தி என்றும் புராணங்கள் கூறுகின்றன.

நன்றி: விகடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here