குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அருவிகள், படகு குழாம், பூங்கா ஆகியவற்றைத் தவிர வேறெங்கும் குடும்பத்துடன் பொழுது போக்க இயலாத நிலை உள்ளது. குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் பலரும் குழந்தைகளை நீச்சல் பழக நீச்சல் குளத்தை தேடுகின்றனர். நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நீச்சல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது நீச்சல் தெரிந்திருப்பது அத்தியாவசியமாகிறது.
இதனை கருத்தில் கொண்டு 2003ல் குற்றாலத்தில் இயங்கி வந்த மான் பூங்காவை மூடி விட்டு, அங்கிருந்த மான்கள் வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கு ரூ.40 லட்சத்தில் அழகான நீச்சல்குளம் அமைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் உள்ள நீச்சல் குளத்தில் பலரும் ஆர்வமாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் ரூ.17 லட்சத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது. மேலும் மூன்று கட்டங்களாக ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் ரூ.70 லட்சம் செலவு செய்த நிலையில் நீச்சல் குளம் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துவிட்டது. சாரல் திருவிழா நடைபெறும் போது நீச்சல் போட்டிக்காக ஒருநாள் மட்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டிக்கிடக்கிறது. இதனால் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் கொடுத்து பெற்றோர் குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புகின்றனர்.தென்காசி மாவட்டத்தில் அரசு சார்ந்த ஒரே நீச்சல்குளமான குற்றாலம் நீச்சல் குளம் சிதிலமடைந்து பயனற்று கிடப்பது நீச்சல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி தனி மாவட்டமாக உருவான நிலையில் குற்றாலம் நீச்சல் குளத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
பயிற்சியுடன் நீச்சல் குளம்
தென்காசி தனி மாவட்டமாக உயர்ந்துள்ள நிலையில், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் அரசு சார்பில் நீச்சல் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நீச்சல் குளங்களை அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.