தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை அமைந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடையம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது. வார விடுமுறை நாட்களில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் வந்து குளித்து செல்கின்றனர்.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கடையம் அடுத்துள்ள கடனா நதி அணைக்கும் மக்கள் செல்ல தடை நீடிக்கிறது.
கடந்த 7ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு காரணமாக கடையம் ராமநதி அணையில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து பொதுமக்கள் நலன், அணை மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதியும் நேற்று ராமநதி அணை மூடப்பட்டது. அணை நுழைவுவாயில் பூட்டப்பட்டு அறிவிப்பு பலகையும் பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப் பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் ராமநதி அணை பகுதிக்கு வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை மீறி அணை வளாக பகுதியில் அத்துமீறி நுழைந்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளிடம் பட்டா எண், வாகன எண், பெயர் மற்றும் செல்போன் எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?