தென்காசி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்த 3260 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 லாரிகளில் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, தென்காசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டன.
தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேவைப்படும் மாவட்டத்துக்கு கொண்டுசென்று, ஆய்வு செய்து, பாதுகாப்பாக வைப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்த 3260 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2680 விவி பாட் (வாக்குபதிவு சரிபார்ப்பு இயந்திரம்) ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் பொறியாளர்களால் சரிபார்க்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணக்கண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் அமிர்தராஜ், தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.