கடையம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய 4ஆவது கரடி

693

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட முதலியார்பட்டியில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 7 வயது கரடி சிக்கியது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து கரடி, காட்டுப்பன்றி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வெளியேறி விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழித்தும் வீட்டு விலங்குகளைக் கொன்றும் வந்தன. மேலும் கடையம் வனச்சரகப் பகுதியான சிவசைலம், கருத்தப்பிள்ளையூர், அழகப்பபுரம், முதலியார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கரடிகள் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன.

இது குறித்து வனத்துறையினருக்குத் தொடர்ந்து வந்த புகாரையடுத்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு நடமாட்டம் உள்ள இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து நடமாட்டம் இருந்த இடங்களில் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இதில் ஏப். 9, மே 31, ஜுன் 12 ஆகிய நாள்களில் மூன்று கரடிகள் பிடிபட்டன.

இந்நிலையில் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்ததையடுத்து ஆம்பூர் அருகே முதலியார்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் கரடியைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இதில் நேற்று இரவு 7 வயது கரடி சிக்கியது. இதையடுத்து கூண்டில் சிக்கிய கரடியை வனச்சரகர் நெல்லை நாயகம், வனவர் முருக சாமி, வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் உள்ளிட்டோர் முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here