கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட தமிழக-கேரளா எல்லைகள் மூன்று மாதங்களை தாண்டியும் திறக்கப்படாததால், தென்காசி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்
தென்காசி மாவட்டத்தில் புளியரை, தெற்குமேடு, பகவதிபுரம், கோட்டைவாசல், கற்குடி, தாட்கோ நகர், கட்டளைக் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் தமிழக-கேரளா எல்லையையொட்டி அமைந்துள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் கேரளாவில் உள்ள அம்பநாடு தேயிலை எஸ்டேட், ஆரியங்காவு, தென்மலை பகுதிகளில் உள்ள ஏலக்காய், மிளகு தோட்டங்களுக்கு வேலைக்காக அன்றாடம் செல்வது வழக்கம். இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள், மற்றும் வேலையில்லாத பலர் நேரடியாக ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இத்தொழில்களை நம்பியே இருக்கிறது. குறிப்பாக அம்பநாடு தேயிலை எஸ்டேட்டில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்குள்ள குடியிருப்பில் தங்கி வேலைபார்த்து வந்தனர்.
இச்சூழலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழக-கேரளா எல்லைகள் மூடப்பட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இக்கிராம மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் முடங்கியுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாததால் நடவுப் பணிகள் தாமதமாகி உள்ளன. இதனால் நடவுப் பணியினை நம்பியிருந்த மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 1000 ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் ஒரு குடும்பத்தைச் சமாளிக்க 1000 ரூபாய் போதுமானதாக இல்லை என புலம்புகின்றனர் கிராமத்து மக்கள்.
மூடப்பட்ட தமிழக-கேரள எல்லைகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லாததால் தங்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்காலிகமாக பணி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறி 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு பணி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
55 வயது நிறைவடைந்தவர்கள் வேலை இல்லாததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடித்து வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.