கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
கடையம் அருகே மைக் செட் உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து 80 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடையம் அடுத்த சிவசைலம் புதுக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் மைக்செட் மற்றும் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ராதா அதே பகுதியில் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராதா குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 80 கிராம் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன்,
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடந்து தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பட்டப் பகலில் கோயிலுக்கு சென்று வந்த அரை மணி நேரத்தில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.