குற்றாலத்தில் குளியல் எப்போது?

17352

மகாத்மா காந்தி 1934-ல் குற்றாலத்துக்கு வந்தபோது, அவர் குளிக்க எந்தத் தடையும் இல்லை என்று அன்றைய ஆங்கிலேய அரசு கூறியிருந்தது. ஆனால், அருவிகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை அறிந்த காந்தி, குற்றாலத்தில் குளிக்க விரும்பவில்லை. அன்று காந்தி எப்படி அருவியை வெறுமனே பார்த்துவிட்டுக் கடந்தாரோ அப்படித்தான் இன்று குற்றாலத்தில் உள்ளவர்களுமே குற்றால அருவியைப் பார்த்துவிட்டுக் கடக்க வேண்டும். யாரும் குளிக்க முடியாது. கொரோனாவின் பெயரால் அருவியையே தீண்டாமை வட்டத்துக்குள் வைத்துவிட்டது நம்முடைய அரசு.

பொதுவாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும்போது மட்டும் அங்கே குளிப்பதற்குத் தடை இருக்கும். வெள்ளம் வடிந்து இயல்புநிலையில் அருவியில் நீர் கொட்டும்போது, சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இப்போது கொரோனாவைக் காரணமாக வைத்து, அருவிகளுக்குப் பெரும் பூட்டுப் போட்டிருக்கிறார்கள். மனிதர்கள் குளிப்பதற்கு வந்தால் அதனால் கொரோனா தொற்றுப் பரவிவிடும் என்று காரணம் சொல்லப்படுகிறது.


அது சரி, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை என்பதில் பொருள் இருக்கிறது. ஆனால், அருவியில் குளிப்பதற்கு உள்ளூர்க்காரர்களுக்கே அனுமதி இல்லை என்றால், அதை எப்படிப் புரிந்துகொள்வது? இந்தியாவின் எந்த ஆறு – குளத்திலும் மனிதர்கள் குளிப்பதற்குத் தடை இல்லையே; அருவிக்கு மட்டும் ஏன் தடை?

குற்றாலம் பகுதியில் அரையாடை உடுத்தி மேனியில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு, அதிகாலையிலேயே அருவிக்கு வந்து குளித்துவிட்டு வீட்டுக்குச் சென்று, பின்னர் தம் அன்றாடப் பணியைத் தொடங்குவது உள்ளூர்க்காரர்களில் கணிசமானோரின் இயல்பு.


ஊரே இப்படி வந்து குளித்தாலும் கூட்டம் பெரிதாகத் திரண்டுவிடாது; காரணம், இது சின்ன ஊர். அப்புறம், அருவி ஒன்று மட்டும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் குடித்துவிட்டுக் கூச்சலிட்டபடி கும்பலாக வந்து அருவிக்குள் நெரிசலாகக் குளிக்க இவர்கள் வெளியூரார் கிடையாது.

காவிரியிலும் தாமிரபரணியிலும் எப்படி உள்ளூர் மக்கள் தன்னடக்கமாகக் குளித்துச் செல்கிறார்களோ அது குற்றாலத்திலும் சாத்தியம்தான். இன்னும் சொல்லப்போனால், அங்கெல்லாம் இல்லாத போலீஸ் பந்தோபஸ்து குற்றாலம் அருவிகளில் எப்போதும் நிற்கிறது. அரசு நினைத்தால், மதுக்கடைகளைத் திறந்துவைத்து, மக்கள் குடிப்பதற்கே வழிசெய்ய முடிகிறது. உள்ளூர் மக்கள் குளிக்க வகை செய்ய அரசால் முடியாதா என்ன?

இதையும் படிக்க: குப்பைமேட்டை குறுங்காடாக மாற்றிய தென்காசி இளைஞர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here