தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 52 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:
ராமநதி அணை-40, தென்காசி-31.14, குண்டாறு அணை- 27, கடனாநதி அணை, கருப்பாநதி அணையில் தலா 17, ஆய்க்குடி-10.40, செங்கோட்டை- 11, சிவகிரி-1. தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது. இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதேபோல், 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 76.70 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 410 கனஅடி நீர் வந்தது. 75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 10 அடி உயர்ந்து 76.50 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 231 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 68.02 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி நீர் வந்தது. 15 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் பிரதான கால்வாய்களான செங்குளம் மற்றும் வைராவி கால்வாய்களில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த கால்வாய்களின் மூலம் செங்குளம் வரையிலான குளங்களும், வைராவி கால்வாயின் கீழ் உள்ள புதுக்குளம், திருப்பணி குளம் ஆகியவையும் பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் இந்த கால்வாய்க்ளின் கீழ் உள்ள சென்னெல்தா குளம், நாராயணபேரி குளம், கைக்கொண்டார் குளம், வெள்ளாளன் புதுக்குளம், பத்மநாதபேரி குளம், ஆவரந்தா குளம், பட்டிப்பத்து குளம் ஆகியவையும் பெருகும்.
நன்றி: தி இந்து தமிழ் திசை