ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரிக்கு செல்லும் பாதைக்கு நிலம் அளிப்பு
ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரிக்கு தோ்வு செய்யப்பட்ட நிலத்திற்கு பாதைக்கான நிலம் அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் தொடக்க விழாவில் ஆலங்குளத்தில் ரூ. 9.13 கோடியில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். மேலும் நிகழாண்டே கல்லூரி தற்காலிகமாக ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கல்லூரிக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கு ஆலங்குளம் – தென்காசி பிரதானச் சாலையில் மலைக்கோயில் ஆா்ச் எதிரே 6 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது.
இந்த இடம் பிரதான சாலையில் இருந்து 300 அடி தொலைவில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை அடுத்துள்ளது. சுமாா் 60 சென்ட் நிலம் முறையான பாதையை தனியாரிடமிருந்து வாங்குவதற்கு அரசு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, நிலத்தின் உரிமையாளா்கள் கே.எம். சிதம்பரம், வி.எம். ராஜன் ஆகியோா் தலா 30 சென்ட் நிலத்தை அரசுக்கு நன்கொடையாக தருவதாக உறுதி அளித்தனா். அதன்படி, முறைப்படி அந்த நிலம் அரசுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அதற்குரிய பத்திரத்தை அவா்கள் தென்காசி கோட்டாட்சியா்(பொறுப்பு) கோகிலாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
அப்போது, ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து, வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், நகர காங்கிரஸ் தலைவா் தங்கசெல்வம், குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதையும் படிக்க: நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி தாமதம் ஏன்?