தென்காசி மாவட்டம் அய்யாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தர்மராஜ் (46). இவர் அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு பொது அறிவு வகுப்பு நடத்தி போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறார். இதற்கு பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் தர்மராஜ் கூறியதாவது:
நான் 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பணியில் சேர்ந்தேன். அப்போது உதவி ஆய்வாளர் கனக சுந்தரம் இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தினார். அதில் சேர்ந்து படித்து, உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்று, 2006-ல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன். குற்றங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி குற்றமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதிலும் காவல்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதிகாரத்தை பயன்படுத்தியும் குற்றங்களை குறைக்கலாம். அன்பாலும் குற்றங்களை குறைக்கலாம். இதில் அன்பால் குற்றங்களை குறைப்பது சுலபமானது. அந்த வகையில் நான் பணிபுரிந்த அனைத்து காவல் நிலையங்களிலும் மக்களிடம் நட்புடன் பழகி, குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
வேலைவாய்ப்பில்லை
அய்யாபுரம் காவல் நிலையம் 1926-ம் ஆண்டில் புறக்காவல் நிலையமாக தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கிராமங்கள் உள்ளன.
இங்கு உள்ள மக்களிடம் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், பழகுவதற்கு அன்பானவர்கள். இந்த பகுதியில் வேலைவாய்ப்பின்றி பல இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் போட்டித் தேர்வு எழுதி அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் எனது ஆசை. இளைஞர்கள் படித்து வேலைக்குச் சென்றால் குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள்.
எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய கனகசுந்தரம் தற்போது திருப்பூரில் ஆய்வாளராக உள்ளார். எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய கனகசுந்தரம் தற்போது திருப்பூரில் ஆய்வாளராக உள்ளார். எனது வாழ்க்கையில் ஓர் உதவி ஆய்வாளர் திருப்புமுனையை ஏற்படுத்தியதுபோல், நானும் நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், போட்டித்தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்த ஊக்கம் அளித்து வருகிறேன்.
உதவும் ஆசிரியர்கள்
வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள், போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து இளைஞர்களுக்கு விளக்கி வருகிறேன்.
களப்பாளங்குளம், வெள்ளப்பனேரி, கரிசல்குளம், கொக்குளம், ராயப்பபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இளைஞர்களை திரட்டி, ஊக்கம் அளித்து வருகிறேன்.
எளிய கேள்விகளை தயார் செய்து, தேர்வு நடத்தி உற்சாகப்படுத்தி வருகிறேன். பொது அறிவு குறித்த தகவல்களை வகுப்பு நடத்தி தெரிவிக்கிறேன். இளைஞர்களும் ஆர்வமாக உள்ளனர். அந்தந்த ஊர்களில் உள்ள ஆசிரியர்களும் உதவுகின்றனர் என்றார் அவர்.
நன்றி: தி இந்து தமிழ் திசை