மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கருப்பாநதி அணை நிரம்பியது.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழல் நிறைந்த இடத்தில 5 ஆயிரத்து 870 அடி உயரத்தில் உற்பத்தியாகும் கருப்பாநதி சுமார் 10 கி.மீ தூரம் மலைப்பகுதியில் ஓடி கருப்பாநதி அணையை வந்தடைகிறது.
கடையநல்லூரை அடுத்த திரிகூடபுரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. கடந்த 1971 ம் ஆண்டு 2 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, 1976 ம் ஆண்டு நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த அணை சுமார் 890 மீட்டர் நீளமும், 27.44 மீட்டர் உயரமும் கொண்டது. அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 12 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வரும். அணையின் மொத்த கொள்ளளவு 72.10 அடி. அணையின் மதகு மூலம் விநாடிக்கு 1000 கன அடி தண்ணீரை வெளியேற்றலாம்.
இந்த அணையின் கீழ் பெருங்கால்வாய், பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் என மொத்தம் 6 கால்வாய்களில் இருந்து புறப்படும் கால்வாய்களின் மொத்த நீளம் 40 கி.மீ. இதன் மூலம் 72 குளங்களுக்கு தண்ணீர் வருகிறது.
கருப்பாநதி அணையில் இருந்து வரும் தண்ணீர் ஊர்மேலழகியான் அணையின் கீழே சாம்பவர்வடகரை ஊரில் அனுமன் நதியுடன் கலக்கிறது. மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் நேரத்தில் இந்த தண்ணீர் ஊத்துமலை பெரியகுளம் வழியாக காவலாக்குறிச்சி வரை செல்கிறது. கருப்பாநதி அணையின் மூலம் தற்போது நேரடி கால்வாய் மூலம் 1551.71 ஏக்கர் நிலமும், மறைமுகமாக குளத்து பாசனம் மூலம் 7 ஆயிரத்து 983.73 ஏக்கர் நிலமும் என மொத்தம் 9 ஆயிரத்து 535.44 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.
நேற்று முன்தினம் இரவில் 30 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. இதனால் அணைக்கு 114 கன அடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய தண்ணீரில் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது