
மேக்கரை அடவிநயினார் அணைக்கு வரும் 117 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தது. ஆகஸ்ட் மாதம் மழை தீவிரம் அடைந்தது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் வேகமாக நிரம்பின
ஒரு மாதத்துக்குப் பின்னர், மீண்டும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 55 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 30 மி.மீ., குண்டாறு அணையில் 40 மி.மீ., ராமநதி அணையில் 20 மி.மீ., மழை பதிவானது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 72.60 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 78 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 67.14 அடியாக இருந்தது. குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
அடவிநயினார் அணை முழு கொள்ளளவான 132.22 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் 117 கன அடி
நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நிரம்பியதால் அச்சன்புதூர் காவல் நிலையம் மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி பணிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. இதனால், குற்றாலத்துக்கு வந்த மக்கள் அருவிகளை தூரத்தில் நின்று பார்த்து, குளிக்க முடியாத ஏக்கத்துடன் சென்றனர்.
இதையும் படிக்க: குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு!