நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி தாமதம் ஏன்?

3469

திருநெல்வேலி – தென்காசி இடையே உள்ள நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், சாலை அகலம் குறைவாக இருப்பதாலும், ஏராளமான வளைவுகள் இருப்பதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பயண நேரமும் அதிகரிக்கிறது. எனவே, இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று, பொதுமக்கள் நீண்ட காலமாக வலியிறுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இச்சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. சாலையை அகலப்படுத்துவதற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கின.

மரங்கள் அகற்றம்:

பழைய பேட்டை முதல் தென்காசி வரை சாலையோரங்களில் இருந்த சுமார் ஆயிரம் மரங்கள் வேரோடு அகற்றப்பட்டன.

இந்நிலையில், டெண்டர் ரத்து செய்யப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மீண்டும் டெண்டர் கோரப்பட்டு, சாலைப்பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பணிகள் எதுவும் நடைபெறாமல் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம.உதயசூரியன் இந்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

பாவூர்சத்திரத்தில் மேம்பாலம்:

அதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட பொது தகவல் அலுவலர் தனசீலன் பதிலளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2013-2014 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த சாலைப் பணிக்காண அறிவிப்பு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

கடந்த 19.9.2014 அன்று ரூ 480.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் உலக வங்கியின் கடனுதவியுடன் இச்சாலை மேம்படுத்தப்பட உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி தென்காசி வரை 45.60 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் சாலையின் அகலம் 24 மீட்டர் முதல் 35 மீட்டர் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் சம அளவில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்த சாலையில் பாவூர்சத்திரத்தில் 990 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் சாலைகளின் ஓரத்தில் 5 மீட்டர் முதல் 5.50 மீட்டர் வரையிலான அகலத்தில் அணுகு சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

ஒப்பந்ததாரர்கள் தேவையான தகுதியை அடையாத காரணத்தால் மறு ஒப்பந்தம் கோரப்பட்டு ஆவணம் ஆய்வில் உள்ளது. இரண்டாம் முறையாக கடந்த 20.11.2019 –ல் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் சாலை பணி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எதிர்ப்பு இல்லை

இதன் மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டு மாதங்கள் ஆகியும் அதனை இறுதி செய்யும் பணி இன்னும் நிறைவடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணிகள் தாமதமாகிறது. ஆனால், திருநெல்வேலி – தென்காசி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக கனவாகவே உள்ளது.
எதிர்ப்பு ஏதும் இல்லாத இந்த திட்டத்தை விரைவில் தொடங்கி நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்கு மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி:தி இந்து தமிழ் திசை

இதையும் படிக்க: தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here