இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு, நடுவழியில் வாகனத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்துள்ளது. பின்னர் வாகன ஓட்டியைக் கடித்துவிட்டு மீண்டும் வாகனத்துக்குள் பாம்பு மறைந்து கொண்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர், சண்முகவேல். அவரது மகன் முப்பிடாதி. செங்கோட்டையில் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். முப்பிடாதியின் வீடு செங்கோட்டை-கொல்லம் சாலையில் இருக்கிறது.
முப்பிடாதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டில் நிறுத்தியிருந்துள்ளார். இன்று டீ குடிக்க வெளியே செல்வதற்காகத் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ரோட்டில் சென்றிருக்கிறார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்தது போல இருந்துள்ளது. ஏதாவது வண்டு கடித்திருக்கும் என நினைத்து பைக்கில் தொடர்ந்து பயணம் செய்திருக்கிறார்.
மீண்டும் அவரது காலில் ஏதோ கடித்ததால் வாகனத்தை நிறுத்தி விட்டுப் பார்த்துள்ளார். அப்போது வாகனத்தில் இருந்த பாம்பு மீண்டும் அவரை இரு முறை கடித்துள்ளது. அதனால் அச்சம் அடைந்த அவர் பைக்கை கீழே போட்டு விட்டு உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். அதற்குள்ளாக பாம்பு அவரது வண்டிக்குள் மீண்டும் பதுங்கிக் கொண்டது.
காலில் நான்கு இடத்தில் பாம்பு கடித்த தடம் இருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், வாகனத்தில் மறைந்திருந்த விஷம் மிகுந்த நல்ல பாம்பை வெளியேற்ற முயன்றனர். ஆனால், பாம்பு எங்கேயோ மறைந்து கொண்டதால் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் இருந்து பாம்பை விரட்ட முயன்றனர். ஆனால், பாம்பு இரு சக்கர வாகனத்தில் பதுங்கியதால் பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர், வாகனத்தின் சில பாகங்களைப் பிரித்து அதில் மறைந்திருந்த பாம்பை பிடித்தார்கள்.
பிடிபட்ட நல்ல பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. பாம்பு கடிபட்ட முப்பிடாதிக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது குளிர் காலம் என்பதால் இரு சக்கர வாகனத்தில் விஷ பாம்புகள் ஏறிப் பதுங்கும் வாய்ப்பு இருப்பதால், பைக்கை எடுக்கும் முன்பாக முழுமையாகப் பரிசோதனை செய்த பின்னரே பயணம் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
இதையும் படிக்க: ஐரோப்பிய நாடுகளில் இருந்து தென்காசி வந்த 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை: கலெக்டர் சமீரன்