நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு பாதிப்புடன் மொத்தம் 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், டெங்கு பாதிப்பு தலைதூக்கி உள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் ஒரு சிலருக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். ஆனால் இந்த மாதம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர், கல்லிடைக்குறிச்சி, பாளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நெல்லை அரசு மருத்துவமனையில் 10 வயதிற்குட்பட்ட 4 குழந்தைகள் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு டெங்கு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டெங்குவின் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கி உள்ளதால் நெல்லையில் வழக்கமாக உள்ள டெங்கு வார்டுடன் தற்போது கூடுதலாக குழந்தைகளுக்கான அதி தீவிர வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4-ந்தேதி அந்த சிறுமியை பெற்றோர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு 9-ந்தேதி கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். அந்த சிறுமி வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்த 7 வயது பெண் குழந்தைக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமிக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாவூர்சத்திரம் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அந்த சிறுமி தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் சுரண்டை பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தீராத காய்ச்சல் இருந்துவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு டெங்கு உறுதியாகி உள்ளது. இதனால் அவர்களை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுவரை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு பாதிப்புடன் மொத்தம் 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்