குற்றாலத்தில் இன்று மதியம் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த 3 மாதங்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு சுற்றுலா வந்து அருவிகளில் நீராடி செல்வது வழக்கம். ஆனால், தற்போதைய ஊரடங்கால் சீசனை பற்றிய சிந்தனையே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் சாரலும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று மதியம் சுமார் ஒன்றரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக இன்று அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. குற்றாலத்தில் இன்று பகல் முழுக்க வெயில் தலைகாட்டவில்லை. மனதுக்கு இதமளிக்கும் வகையில் குளுகுளு தென்றல் காற்றும் வீசியது.
இந்த சாரல் மழையால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் ஓரளவு தண்ணீர் விழுந்தபோதும் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அனைத்து அருவிகளிலும் காவலுக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: குற்றாலத்தில் ஊரடங்கு எதிரொலி; 100 டன் பழங்கள் தேக்கம்