கொரோனா ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சிக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு

898

ஊரடங்கு காரணமாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தை பொருத்தவரை கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள் வாடகை, தொழில் வரி, கழிப்பிடங்கள் கட்டண வசூல் உரிமம், உடை மாற்றும் அறை கட்டண வசூல் உரிமம், பொருட்கள் வைப்பு அறை கட்டண வசூல் உரிமம் உள்ளிட்டவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வருவாய் கிடைத்தது.

மெயினருவி கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் மூலம் கிடைத்த வருவாய் 2017-18ல் ரூ.19 லட்சம், 2018-19ல் ரூ.19 லட்சம், 2019-20ல் ரூ.30 லட்சம், புலியருவி கார் பார்க்கிங் கட்டணம் வசூல் உரிமத்தை பொருத்தவரை 2017-18ல் ரூ.1.75 லட்சம், 2018-19ல் ரூ.1.75 லட்சம், 2019-20ல் ரூ.2 லட்சம் ஆகும்.

ஐந்தருவி கார் பார்க்கிங் கட்டண உரிமத்தை பொருத்தவரை 2017-18ல் ரூ.18 லட்சம், 2018-19ல் ரூ.18 லட்சம், 2019-20ல் ரூ.36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. செங்கோட்டை சாலை தங்கும் விடுதி மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கிடைத்தது. மெயினருவி, ஐந்தருவியில் உள்ள கடைகளை ஏலம் விடுவதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கிடைத்தது.

கட்டண கழிப்பிடங்கள், உடை மாற்றும் அறை, பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்டவற்றின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.25 லட்சம் கிடைத்தது. விடுதிகளில் தொழில் வரி மூலம் ஆண்டுக்கு ரூ.1.40 கோடி கிடைத்தது. இந்தாண்டு விடுதிகள் திறக்கப்படாத நிலையில் தொழில் வரியை எவ்வாறு வசூல் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மட்டும் ரூ.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைக்குமா?

தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அதிகமான பணியாளர்களை கொண்ட பேரூராட்சி குற்றாலம். அலுவல் பணியாளர்கள் 27 பேர், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 12 பேர், தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 40 பேர் என மாதம் ரூ.18 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட வேண்டும்.

2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணமாக பேரூராட்சி சார்பில் ரூ.5 லட்சம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வரை வளர்ச்சி நிதி மூலம் பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், வரக்கூடிய மாதங்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணப்பற்றாக்குறை உள்ளதால் பேரூராட்சி பணியாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிற அரசு துறைகளைப்போல் அல்லாமல் பேரூராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேரூராட்சி சார்பிலேயே சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? – சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here